துபாயில் இருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அதில் நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து துபாய் வழியாகச் சென்னைக்கு வந்திருந்த 4 பார்சல்களும் இருந்தன. அந்தப் பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள், உணவு, மருத்துவ பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், அலுவலர்களுக்கு அந்தப் பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பார்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர்.
அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதில், நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் முகவரியும், பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் ஆந்திர மாநிலம் முகவரியும் இருந்தன.
இதைத் தொடர்ந்து, சுங்கத்துறையினா் அந்த நான்கு பார்சல்களையும் உடைத்து பார்த்தனர். அப்போது போதை மாத்திரைகள், போதைப்பவுடர் பெருமளவு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த எக்ஸ்டஸி என்ற போதை மாத்திரைகள் ஐந்து ஆயிரத்து 210ம், மெத் பவுடர் எனப்படும் போதை பவுடா் 100 கிராமும் இருந்தது.
இந்தப் போதை மாத்திரைகள், போதை பவுடரின் மொத்த மதிப்பு ரூ.1.65 கோடி எனக் கூறப்படுகிறது.