திருப்பூர்: நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளியங்காடு பகுதி அருகில் உள்ள திருவிக நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு காவல் துறையினர் வெட்டுப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு உயிரிழந்த பாலமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.