கூட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அத்யாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவிப்பு திருப்பூர்:உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணார் செல்லும் சாலையில் உள்ளது சின்னார். இரு மாநில எல்லையான இப்பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் தளிஞ்சி மலை கிராமம் உள்ளது. அங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதனையொட்டிய தளிஞ்சி வயல் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், கிராம மக்களுக்கு எந்த ஒரு தேவை என்றாலும் சின்னார் பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்விரு கிராமங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் பாயும் தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய ஆறுகள் சந்திக்கும் கூட்டாற்றை கடந்து தான் சின்னாறு பகுதிக்கு வர வேண்டும். அந்தவகையில், கூட்டாற்றின் நடுவே உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தியே கிராம மக்கள் வந்து சென்றனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் கூட்டாற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் கூட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது,“ பருவமழை காலங்களில் கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அச்சயங்களில் ஆற்றை கடந்து செல்வது ஆபத்தானது. ஒரு கரையில் இருந்து மறு கரை வரை கயிறு கட்டி அதை பிடித்துக்கொண்டும், பரிசல் மூலமும் செல்வது வழக்கம். 4 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கின்போது கடக்க முற்பட்ட 7 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில், குடும்ப அட்டைகள், ஆதார் அடையாள அட்டை அடித்து செல்லப்பட்டது. அதற்கு மாற்றாக குடும்ப அட்டை கேட்டு இதுவரையும் வழங்கப்படவில்லை. அந்த பிறகு கேரளா மாநில எல்லைக்குள் சென்று அதன் பின்பே சின்னார் பகுதியை அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில சமயங்களில் அம்மாநில வனத்துறையினர் எல்லையை அடைத்து விடுவதால் அவசர தேவைக்கு கூட வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பலமுறை உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை ஆட்சியாளர்கள் செய்யவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிகரித்துள்ளதால், நாள் முழுவதும் வெள்ளம் வடியும் வரை காத்திருந்து பின்னர் செல்ல வேண்டியுள்ளது. பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உயர் மட்ட பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:“2026-இல் திமுக எனும் அரக்கனை பொதுமக்கள் அழித்துவிடுவர்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்