திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சுமார் இரண்டரை லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தீபாவளி பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவர். அந்த வகையில், தீபாவளியைத் தொடர்ந்து சாத் பூஜா என்ற வடமாநில பண்டிகை வரும் நிலையில், திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக வடமாநிலங்களுக்குச் செல்கின்ற ரயில்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் திருப்பூரில் இருந்தோ, கோவையில் இருந்தோ ரயில்கள் புறப்படாத நிலையில், கேரள மாநிலமான திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூரில் நின்று செல்லும் ரயில்களைத்தான், திருப்பூர் வாழ் வடமாநிலத் தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். ஆனால் இந்த ரயில்கள் இங்கு வரும்போதே முழுமையாக நிறைந்து வருகிறது.
நிற்க கூட இடம் இல்லாமல் வரக்கூடிய இந்த வடமாநில ரயில்களில் கோவை, திருப்பூரில் இருந்து வடமாநிலம் நோக்கி செல்லக் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறுகிறார்கள். அவர்கள் தங்கள் உடலை உள்ளே திணித்தால் மட்டும் போதும் என்று ரயில்களில் ஏறிச் செல்லும் கொடுமையான காட்சிகளை ரயில்தோறும் காண முடிகிறது. ஆனாலும் ரயில்வே நிர்வாகம் இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக, பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், சாத் பூஜா பண்டிகை கொண்டாட ஏதுவாக கோவை, போத்தனூரில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்படி, வருகிற 14ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி ஆகிய இரண்டு செவ்வாய்கிழமையும், காலை 11.50 மணிக்கு கோவை ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் புறப்படுகிறது.