திருப்பூர்:தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வருகின்ற 15 தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரில் இயங்கி வரும் ஏ.வி.பி கல்லூரியில் இன்று (ஜன.12) பொங்கல் விழா நடைபெற்றது. மாணவிகள் வேட்டி அணிந்து பொங்கலைக் கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி மாவிளக்கு, முளைப்பாரி எடுத்துப் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். இதில் ஏராளமான மாணவிகள் சேலை அணிந்து வந்து உற்சாகமாகப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். வழக்கமாக மாணவிகள் சேலை அணிந்து வந்து பொங்கல் கொண்டாடும் நிலையில் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள், வேஷ்டி அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.
பொங்கல் கொண்டாட்டம் குறித்து கல்லூரி மாணவி கூறுகையில், “பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மிட்டாய் வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலை திருவிழா என வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்கள் மட்டும் தான் வேட்டிகளைக் கட்ட வேண்டும் என்பது இல்லை. ஆண் பெண் என அனைவரும் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் கொண்டாட வேண்டும்” என தெரிவித்தார்.