திருப்பூர்:தாராபுரம், குண்டடம், பொங்கலூர், பல்லடம், மங்கலம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்டப் பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். இந்தப் பகுதிகளில் பல்வேறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது வழக்கம். இருந்த போதிலும், ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தக்காளி, வெங்காயம் ஆகியவைகளின் சாகுபடி தான் அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதோடு, வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது தக்காளியின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு திருப்பூர் சந்தைகளில் விற்பதற்கே தக்காளி பற்றாக்குறையாக இருக்கும் நிலை உருவாகி உள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் அதற்கு மேலாக விற்கப்படுவதால், திருப்பூர் சந்தைப்பேட்டை மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விவசாயிகளும், விற்பனையாளர்களும் பெரும்மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை மிகவும் குறைந்து போய்விடும் போது, பெரும் அவதிக்கும் ஆளாகி அவற்றை விற்பனை செய்ய மனமில்லாமல் சாலையிலேயே கொட்டிச் சென்ற நிலையையும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அனுபவித்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது திருப்பூர் சுற்றுப்பகுதியில் தக்காளி பயிரிட்ட விவசாயிகளின் காட்டில் பணமழை என்பது அடைமழையாய் கொட்டி இருக்கிறது.