இன்று காலை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையொட்டி மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பள்ளிகளிலும், இணையதளங்களிலும் பார்த்து வருகின்றனர். மாநிலத்தில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்த அவர் இதற்காக உறுதுணையாக இருந்த ஆசிரியருக்கும், மாணவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்...!
திருப்பூர் மாவட்டம் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 24,835 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் அதில் 23,686 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருப்பதாகவும், தேர்வு எழுதிய 2697 மாற்றுத்திறனாளிகளில் 2404 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும், மற்றும் தேர்வு எழுதிய 45 சிறைவாசிகளில் 34 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாகவும் புள்ளி விபரம் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் 3-ஆவது இடத்தில் இருந்து இந்தாண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளோம் எனவும் கூறினார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, திருப்பூர் கல்வி மாவட்டம் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆசிரியர்களின் அயராத முயற்சியால்தான் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.