திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் போதைப்பொருள் விற்பனையில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் கோவையில் முத்தையா என்பவர் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவரது மனைவி தமிழ்ச்செல்வி திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான காவலர்கள் தனிப்படை அமைத்து தமிழ்ச்செல்வியைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி சாலை அணைக்காடு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த இரு பெண்கள் உள்பட 3 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடமிருந்த இரண்டு மூட்டையைப் பிரித்துப்பார்த்தபோது, அதில் 51 கிலோ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.