திருப்பூர்மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சாலையில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் (31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்திபன் (25) ஆகியோர் சென்றனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
பின்னர், மூவரும் சேர்ந்து சிறுமியின் காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து காதலனை விரட்டியடித்தனர். பின்னர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று காளிவேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென மூவரும் சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
மேலும், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் சிறுமியை இறக்கி விட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடந்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளைப் பார்வையிட்டனர். அப்போது அதில் ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்திபன் ஆகியோர் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதைனையடுத்து மூவரையும் காவல் துறையினர் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை பல்லடம் காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:"குழந்தை எப்படி சிகப்பாக பிறக்கும்?" - காதல் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை!