தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; காப்பகம் மூடப்படும் - அமைச்சர் கீதா ஜீவன் உறுதி - விவேகானந்தா சேவாலய

திருப்பூரில் ஸ்ரீவிவேகானந்தா சேவாலய காப்பகத்தைச்சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, காப்பகத்தை ஆய்வு செய்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார்.

ஆதரவற்றோர் இல்ல சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; மூடப்படும் காப்பகம் - சமூக நலத்துறை அமைச்சர்
ஆதரவற்றோர் இல்ல சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்; மூடப்படும் காப்பகம் - சமூக நலத்துறை அமைச்சர்

By

Published : Oct 7, 2022, 4:21 PM IST

திருப்பூர்: திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா சேவாலயத்தில் 15 குழந்தைகள் தங்கி அம்மாபாளையம் அரசுப்பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம்(05.10.2022) இரவு ரச சாதம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர்.

நேற்று காலை காப்பகத்தின் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, இரண்டு சிறுவர்கள் காப்பக வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள சிறுவர்கள் மயக்க நிலையில் இருந்ததைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், மேலும் ஒரு சிறுவன் சிகிச்சைப்பலனளிக்காமல் உயரிழந்தான்.

மூன்று சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அலுவலர் மணிவாசன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. மேலும் சமூகநலத்துறை இயக்குநர் வளர்மதி தலைமையிலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதா ஜீவன், 'திருப்பூர், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் நடந்த இந்நிகழ்வு மிகவும் வருத்தத்துக்குரியது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டு தமிழ்நாடு முதலமைச்சர் வருத்தம் அடைந்தார். உடனடியாக கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவுவிட்டதோடு தன்னையும் நேரில் சென்று விசாரிக்கக் கூறினார்.

நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டபோது காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான போதுமான வசதிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. சிறுவர்களை இரவு நேரத்தில் பாதுகாக்க காப்பாளர், ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது தெரிய வருகின்றது.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களிடம் நலம் விசாரித்தார்

தனியார் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனப்போக்கின் காரணமாகவே உயிர் இழப்பு நிகழ்ந்திருக்கிறது. உடனடியாக ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அங்கு பயின்ற சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அரசின் கண்காணிப்பில் பாதுகாக்கப்படுவார்கள்.

மேலும் ஸ்ரீ விவேகானந்த சேவாலய காப்பக நிர்வாகி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பூரில் உள்ள 13 காப்பகங்களும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் நல குழும அலுவலர்கள் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனால், தொடர் ஆய்வு மேற்கொள்ளாத நிலையில் அவர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற காப்பகங்கள் வெளியில் இருந்து வழங்கும் உணவுகளை வாங்கக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் விதிமுறைகளில் உள்ளது. ஆனால் அதையும் மீறி அவ்வாறு செயல்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்களின் விசாரணை நிறைவில் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மூத்த ஐஏஎஸ் அலுவலரான மணிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details