இன்றைய தலைமுறையினர் எதிலும் வேகமாக வளர வேண்டும். எழுந்து வரும்போதே உயர பறக்க வேண்டும் என்ற ஆசை தொற்றி வாழ்கின்றனர். சமீபகாலமாக வயதான பெற்றோர்களை இளம்பிள்ளைகள் கைவிடும் சோக சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. அனைத்துப் பகுதிகளிலும் தொற்று நோயைப் போல், குடும்ப உறவுமுறையை, இத்தகைய செயல்கள் சீரழித்து வருகின்றன.
பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையும் நீடிக்கிறது. வேர்களை மறக்கும் விழுதுகளாகவே மாறிவிட்டது வேதனைதான். அந்த வகையில், திருப்பூரில் பெற்ற மகனின் கொடுமை தாங்க முடியாமல், தங்களை கருணைக் கொலை செய்யுங்கள் என்று தள்ளாடும் வயதில் தம்பதினர் வந்து கூறும் காட்சி நெஞ்சை பதறச் செய்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி கருணையம்மாள். இவர்களுக்கு பழனிசாமி என்ற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது மகனும், மகளும் சொத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு, தங்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். எனவே, தங்களை கருணைக் கொலை செய்ய வலியுறுத்தி சென்னியப்பனும், கருணையம்மாளும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.