திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப்பஞ்சு ஏற்றுமதியால் நூல் விலை அதிகரித்துள்ளது. இதனால் காடாத்துணியின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே நூல் விலையை சீராக வைத்திருக்க வலியுறுத்தியும், மூலப்பொருளான கழிவுப்பஞ்சு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி உற்பத்திப் பொருட்களான காடாத்துணி ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்லடம் திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 25 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்! - பஞ்சு ஏற்றுமதி
திருப்பூர்: நூல் விலை உயர்வால், கழிவுப்பஞ்சு ஏற்றுமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தக் கோரியும், காடாத்துணி ஏற்றுமதியை ஊக்குவிக்கக் கோரியும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நேற்று (மே 4) ஜவுளி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் 50 லட்சம் மீட்டர் காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.