திருப்பூர் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது பனியன் தொழில்தான். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையும் கடந்து உலக அரங்கில் திருப்பூர் பனியன்கள் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பின்னலாடைகளில், 55 சதவிகித பின்னலாடைகள் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி ஆகுகின்றது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஜிஎஸ்டியால் திருப்பூர் பின்னலாடை சரிவை சந்தித்து வந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில், திருப்பூர் தொழில் துறையை பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வதற்கான அறிவிப்பு ஏதும் இல்லாதது தொழில் துறையினர் இடையே ஏமாற்றத்தை அளித்திருந்தது.
இதனையடுத்து, தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் திருப்பூர் தொழில் துறையில் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தொழில் துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.