திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு நவீன வடிவமைப்பு செயல்பாட்டில் இந்தப் பேருந்து இயங்கி வருகிறது. இதையடுத்து இந்தப் பேருந்தில் சுமார் 80 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், கடைக்காரர்கள் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் நடைபாதைகளையும், மக்கள் பயன்படுத்தக் கூடிய இடத்தையும் ஆக்கிரமிப்பது தொடர் கதையாகப்வே உள்ளது.
இந்த நிலையில் இந்த பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் என்ற பெயரில் உள்ள பேக்கரி முன்பாக அமர்ந்திருந்த பெண் ஒருவரை கடைமுன் உட்கார வேண்டாம் என்று கூறிய கடை உரிமையாளர் அங்கிருந்து எழுந்துச் செல்ல கூறி உள்ளார். இது தொடர்பாக கடை உரிமையாளருக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, கடைக்காரர் அந்தப் பெண் மீது தண்ணீர் ஊற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளத்தில் வெளியானது. ஏற்கனவே கடையின் வெளியே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலையில் கடையின் வழித்தடத்தில் அமர்ந்திருந்ததாக குற்றம் சாட்டி அந்த பெண்ணை அவமரியாதையாக பேசியது மட்டுமில்லாமல், அந்தப் பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றி அநாகரிகமாக நடந்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாநகராட்சியின் உதவி ஆணையாளருக்கு தெரியவந்துள்ளது.
வீடியோவில் பதிவுசெய்யப்பட்டதை உறுதி செய்தப் பின்னர், மாநகராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்தச் சம்பவத்தால் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடைக்காரர் தரப்பில் கூறியதாவது, "அந்தப் பெண் மீது நான் தண்ணீர் ஊற்றவில்லை. கடை வாசலில் உட்காரக்கூடாது என்பதற்காக, கடையின் முன்புறம் தரையில் தான் தண்ணீர் ஊற்றினேன்" என்றுக் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பலரும் அவரகளது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இவ்வளவு வசதிகள் செய்த இந்த பேருந்து நிலையத்தில் உள்ள, மெயின் டெர்மினல் பில்டிங் தவிர்த்து மற்ற பகுதிகள் முழுக்க வணிக பயன்பாட்டு நோக்கத்தில் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உட்காருவதற்கு எந்த இடத்திலும் பயணிகளுக்கு இருக்கைகள் அமைக்காமல் இருப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்றும், அதனால் ஆங்காங்கே வணிக வளாக திண்ணைகளில் உட்காரும்போது கடைக்காரர்கள் பொதுமக்களிடம் கடிந்து கொள்கின்றனர். இதனால், டெர்மினல் பில்டிங் தவிர்த்து முழு பகுதிகளிலும் பயணிகள் உட்காரும் வகையில், இடவசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஒரே வாரம்.. ஓஹோனு போன அமேசான்.. பிளிப்கார்ட்! எவ்வளவு கல்லா கட்டி இருக்காங்க தெரியுமா?