அரசு பள்ளி கழிவறையில் மின்சாரம் தாக்கி காயமடைந்த மாணவி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தை சேர்ந்த டேவிட்ராஜ் - ஜெனிபரின் தம்பதியின் மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர்கள் திருப்பூர் செரங்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். ஜோஸ்லின் ஜெனியா திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.
ஜோஸ்லின் ஜெனியா கடந்த 5 ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து அறுந்து தொங்கிய ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயமடைந்தார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு முறிவு மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்காததால், ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறன் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:‘பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் கண்டனம்!
சிறுமி ஜோஸ்லின் ஜெனியா, அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி அடிபட்ட நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் அவரது தாய் ஜெனிபர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் ஜெனிபர் கூறுகையில்; “திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலி வேலை செய்து வருகிறேன். மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள்.
எனது மகள் ஜோஸ்லின் ஜெனியாவுக்கு முழங்கை மற்றும் தோள்பட்டை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வருகிறேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யுமளவுக்கு வசதி இல்லை. தமிழ்நாடு அரசு எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு