மது விற்றதாக இளைஞரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த இளைஞர் தளபதி (32). இவர் ஆம்பூர் நகர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக, ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், இளைஞரை ஆம்பூர் நகர காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஆம்பூர் பி கஸ்பா பகுதிக்கு இளைஞர் தளபதி சபரிமலைக்குச் செல்லும் தனது உறவினர்களைக் காண நாகேஸ்வரன் கோயிலுக்கு வந்துள்ளதாக ஆம்பூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது.. உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தல்!
அப்போது டீ குடிப்பதற்காக கோயிலில் இருந்து வெளியே வந்த தளபதியை, ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தளபதியின் உறவினர்கள், ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, இளைஞரை விடுவிக்கக்கோரி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர், இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் இளைஞர் சில நாட்களாக மது விற்பனை செய்து வரவில்லை என கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறி, தளபதியை காவல்துறையினர் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். இதையடுத்து இளைஞரின் உறவினர்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தென்காசியில் சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன்.. 7 ஆண்டுக்குப் பின் சிக்கியது எப்படி?