சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் தன்னுடைய கோர முகத்தைக் காட்டிவருகிறது. இந்த வைரசால் பாதிப்பிற்குள்ளாகாத நாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்தியாவிலும் இந்த வைரசின் பரவல் தற்போது மெல்ல மெல்ல ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு உள்ளதே.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த பலர், மக்களிடையே இந்த வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த திருப்பூரைச் சேர்ந்த முகமது அப்பாஸ்.
இவர் திருப்பூர் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியதால் கரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கலாம் என்ற அச்சத்தின்பேரில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதல்கட்ட கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்த முகமது அப்பாஸ் பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் குடும்பத்தினருடன் பரிசோதனை மேற்கொண்டு 18 நாள்கள் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிகிச்சைக்குப் பின் மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்த மருத்துவர்கள் 2 தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கேட்டறிந்த பின்னர், கரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க, தான் பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ தயாராக உள்ளதாகவும், தங்களுடைய ஜஅமாத்தினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
கேரளாவில் இந்த பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் பலர் வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டுவந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுவந்த பலரும் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்துள்ளதையடுத்து அரசு எந்தவித வேறுபாடும் பார்க்காமல் தங்களது ரத்தத்திலுள்ள பிளாஸ்மாக்களைப் பயன்படுத்தி கரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்டுவரத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? விவரிக்கிறார் டாக்டர் ஆஷா கிஷோர்