திருப்பூர் வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம் திருப்பூர்:திருப்பூர் அடுத்த அவிநாசிபாளையம் அருகே உள்ள வேலம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு தற்போது வேலம்பட்டி அருகே சுங்கச்சாவடியைத் திறந்து, சுங்கக் கட்டணம் வசூல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மொத்த நீளமான 31 கிலோ மீட்டரில், 20 கிலோ மீட்டர் தூரம் திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் இந்த சாலை செல்கிறது. கட்டண சாலை என்பதற்கான எந்தவித கட்டுமானங்களும் செய்யப்படாமல், ஏற்கனவே இருந்த சாலை மீது எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே சாலை அமைத்து, நான்கு வழிச்சாலை என்கிற தோற்றத்தை மட்டுமே உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது வேலம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நெடுஞ்சாலைத் துறையினர் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில் திருப்பூர் மக்கள், போக்குவரத்துப் பகுதியைத் திட்டமிட்டு டோல்கேட் அமைத்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அவிநாசிபாளையத்தில் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி வேண்டாம் என வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இதில், சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கம், வடக்கு அவிநாசிபாளையம் கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், இந்த முற்றுகைப் போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வேலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி வேண்டாம் என கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் பல்லடம் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்திப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வேலம்பட்டி பகுதி சுங்கச்சாவடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் அவினாசிபாளையம் ஊராட்சித் தலைவர் நடராஜன் கூறுகையில், "பொதுமக்களையும், நீர்நிலையையும் பாதிக்கின்ற இந்த சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டம் செய்து வருகிறோம். இதை அகற்றாவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!