திருப்பூர்:அதிமுக சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மாநகர மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் விண்ணப்பப் படிவங்களை ஆய்வு மேற்கொண்டார்.
இதை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முன்னாள் சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், “இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று பெட்டி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு மாதத்திற்குள் உங்கள் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டங்களும் செயல்படத்தப்படவில்லை.
மக்களின் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை:அந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதுவரை எந்த தொகுதியிலும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோன்று முதலமைச்சரான பிறகு உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரி திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் என்று மூன்று தலைப்புகளில் பெயர் வைத்து பொதுமக்களை ஏமாற்றி உள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 10 கோரிக்கைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் மனுவாக அளித்து, இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், தற்போது வரை எந்த ஒரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.