பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி திருப்பூர்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டன. இதற்காக மாநாடு, பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் எஸ்டிபிஐ (SDPI) கட்சி சார்பில் ”வெல்லட்டும் மதச்சார்பின்மை” என்ற தலைப்பில் மதுரையில் இன்று(டிச.07) மாலை மாநாடு நடைபெறவுள்ளது. மாலை 4 மணியளவில் தொடங்கவுள்ள இந்த மாநாட்டில் அக்கட்சியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுச் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கனோர் பங்கேற்க உள்ளனர். இதன் ஒரு பகுதியாகத் திருப்பூரிலிருந்து 2000 மேற்பட்டவர்களை முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மதுரைக்கு வழி அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்திலிருந்து அதிமுகவிற்கும் இஸ்லாமியர்களுக்கும் நல்ல உறவு உள்ளது. இஸ்லாமியர்களுக்குத் தாய்வீடாகவும் தந்தை வீடாகவும் இருந்து அவர்களைப் பாதுகாப்பாக அதிமுக அரவணைக்கும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஜனவரி ௭) மாலை மாநாட்டில் பங்கேற்க உள்ளார். திருப்பூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
இனி எதிர்காலத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் திமுகவின் சாயம் வெளுக்கும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வருகிறது திமுக. சிறுபான்மையின மக்கள் திமுகவினரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக காலத்தில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சிறப்பான முறையில் பணம் வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது குறிப்பிட்ட அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல் பொங்கலில் ஆயிரம் ரூபாய், இரண்டாவது பொங்கலில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. எந்த ஒரு வருவாயும் இல்லாத கரோனா காலகட்டத்தில் இது வழங்கப்பட்டது. தற்பொழுது, ஆயிரம் ரூபாயாவது பொதுமக்களுக்கு அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்று எடப்பாடியார் வலியுறுத்தினார். அது முறையாக அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
அமலாக்கத்துறை தங்கள் மீது பாய்ந்து விடுமோ என்ற பயத்தில் பாஜகவைக் குற்றம் சாட்டி வந்த உதயநிதி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்குப் பிரதமர் மோடியை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது சந்தர்ப்பவாத அரசியல்.
இன்று (ஜனவரி 07) முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது வரை, தமிழகத்தில் எங்கும் டோக்கன் விநியோகிக்கப்படவில்லை. விரைவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையாக டோக்கன் வழங்கி பொங்கல் தொகுப்பை வழங்கிட வேண்டும்” என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன்,பழனிச்சாமி, மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உட்படப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:பொங்கலுக்குப் பேருந்துகள் இயங்குமா..? போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை பேச்சுவார்த்தை..!