திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில், மூலனூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய தொடர் கனமழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கடந்த 20 நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக காலை 10 மணிக்கே 35 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது.
மேலும், ஆடி மாதத்தில் வீசும் காற்றும் குறைந்து போனதால் இரவு 11 மணி வரையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஆக. 31) காலை முதல் மாவட்டத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், மாலை 4 மணி முதல் காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சில பகுதிகளில் சிறிய அளவில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.