திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையம் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. விடுமுறை முடிந்து இன்று காலை வங்கிப் பணிக்கு ஊழியர்கள் வந்தனர். அப்போது, வங்கி உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர்கள் உடைக்கப்பட்டு பணம், நகைகள் கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக காமநாயக்கன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வங்கியின் பின்புறம் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வங்கியில் இருந்த பணம், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
கொள்ளை போன வங்கியில், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் திஷா மிட்டல், பல்லடம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இந்த வங்கியில் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.