திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலமாக நொய்யல் ஆற்றின் துணை ஓடையான சங்கிலிப்பள்ளத்தில் வருகிற கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் ஆற்றில் விடத் திட்டமிடப்பட்டு இருந்தது. சுமார் 100 எம்.எல்.டி., அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கக் கூடிய இந்தத் திட்டம் நொய்யல் ஆறு மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக செயல்படுத்த தயாராகி வந்தது.
ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் பள்ளிவாசல் உள்ளதால் அப்பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இத்திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்தினர். கடந்த வாரத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டிப் போராட்டம் நடத்தினர். இத்திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும், அப்பகுதி மக்கள் சுத்தரிப்பு நிலையம் அமைப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று(ஜூன் 28) சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.