தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 29, 2020, 12:13 PM IST

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும் - அழகிரி

திருப்பூர்: காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ். அழகிரி, தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை எனக் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி
செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் இன்று காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,

“பொதுத் துறை நிறுவனங்கள் அதிவேகமாகத் தனியாருக்கு விற்கப்பட்டுவருகின்றன. தனியாருக்கு ரயில்வே துறை தாரைவார்க்கப்பட்டால், கட்டணம் பல மடங்கு உயரும். பொருளாதாரத் துறையில் மத்திய அரசு பல தவறுகளைச் செய்துவருகிறது.

மக்களின் கவனங்களைத் திருப்பவே, குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தேவையில்லாத ஒன்று. ஜிஎஸ்டி வரி முறையில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதனால், பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழல் நிலவுகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மாநில அரசு நினைத்தால் மத்திய அரசின் தேவையின்றி இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் , எடப்பாடி அரசு அதைச் செய்யாமல் உள்ளது.

சமஸ்கிருதத்தைக் காட்டிலும், தமிழ் இனிமையான மொழி, தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழ்முறைப்படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கோரிக்கை.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான், மீண்டும் திமுகவுடன் கூட்டணி குறித்தும், சீட் பங்கீடு குறித்தும் பேச முடியும்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி

திமுக - காங்கிரஸ் உடனான நெருக்கடி என்பது நண்பர்கள், குடும்பத்திற்குள் வரும் நெருக்கடி போன்ற இயல்பான ஒன்றுதானே தவிர வேறு எதுவும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: பாஜக அறக்கட்டளைகளை பொதுவுடைமையாக்க முடியாதா? - ஹெச். ராஜாவுக்கு அழகிரி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details