திருப்பூர்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா (J.P.Nadda), திருப்பூரில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (நவ. 24) திருப்பூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழ்நாடு பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணிச்செயலாளர் குஷ்பூ, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட 351 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழுக்காக போராடும் கட்சி பாஜக
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் கூறியதாவது, 'பல சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டது இந்த திருப்பூர் மாவட்டம்.
திருப்பூர் குமரனை நினைவுகூர்கிறோம். சுதந்திரத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த வ.உ.சி போன்றோர் வாழ்ந்தது இந்த தமிழ்நாட்டில் தான். சிறந்த கலாசாரம் கொண்ட தமிழ்நாட்டில், திருப்பூரில் நடக்கும் செயற்குழுவில் கலந்துகொண்டதில் நான் பெருமையடைகிறேன்.
திமுகவின் குடும்ப அரசியல் பல காலமாக உள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரானது பாஜக மட்டுமே. முன்னேற்றம் மக்கள் நலனுக்கானது பாஜக.
70 ஆண்டுகளாக இருந்த காஷ்மீருக்கு சுதந்திரம் பெற்று தந்துள்ளோம். தமிழ்நாடு நலனுக்காக உழைப்பது பாஜக மட்டுமேதான். திமுக தமிழ்நாடு கலாசாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.
கரோனா காலத்தில் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்காமல் செய்த திமுக, பாஜக போராட்டத்திற்கு பின்னே அனுமதித்தது.
வெற்றிவேல் யாத்திரையை தடுக்க பார்த்த தலைவர்களெல்லாம், இப்போது வேலோடு போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாசாரத்துக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும். தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார்.