திருப்பூர்:திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் (Fire Accident in tirupur Baniyan market) 50 கடைகள் எரிந்து நாசமாகின. இதைத்தொடர்ந்து, வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அப்பகுதியில் மீண்டும் கடைகள் அமைக்கப்படும் என்றும்; பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் காதர்பேட்டை எனும் பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பனியன் பஜார் எனப்படும் பனியன் சந்தை மையப் பகுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேதமாகின.
தற்காலிகத் தடுப்புகள் மற்றும் தகரம் மேற்கூடை அமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென அடுத்தடுத்த கடைகள் முழுவதும் பற்றி எரிந்ததால் அக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த பின்னலாடை துணிகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமாயின.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன் 23) காலை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்துக் கடைகளும் தீக்கிரையாகின:இந்தப் பாதிப்புகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நஞ்சப்பா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக காதர் பஜார் என்ற பனியன் பஜாரில் சிறு வியாபாரிகள் பனியன் வியாபாரம் செய்து வந்ததாகவும், இந்த நிலையில் இங்கு நேற்றிரவு மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்த கடைகளுக்கு அவை பரவியதாகவும் தெரிவித்தார். இந்த பயங்கரமான தீ விபத்தினால், அனைத்துக் கடைகளும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து உள்ளதாகவும் கூறினார்.
உயிரிழப்புகள் ஏதும் இல்லை:இதனிடையே, அப்பகுதியில் இருந்த ஒரு வீடும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மற்றொரு பகுதியில் மூன்று வீடுகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறிய அவர், நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இதேபோல, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து விட்டதாகவும் அவர் கூறினார். இந்த பயங்கர விபத்தினால், ஒட்டுமொத்தமாக சுமார் மூன்று கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும் என்றார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் அனைத்து முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இதனால், பாதிக்கப்பட்ட கடை வியாபாரிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக மீண்டும் கடை அமைத்துத் தரும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் தெரித்தார். இந்த தீ விபத்தினால் கடைகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவிப்போருக்கு மாவட்ட ஆட்சியர் அரசுடன் பேசி இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.