பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் இந்தியைத் திணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில், இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் வலுத்துவருகிறது. இந்தியில் பேசிய விமான நிலைய பாதுகாப்பு அலுவலரிடம் தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய திமுக எம்பி கனிமொழியைப் பார்த்து, "நீங்கள் இந்தியர்தானே" என கேள்வி கேட்டதாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டாலின், வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் 'மெட்ரோ' பட நடிகர் சிரீஷ் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து தமிழ் சினிமா பிரபலங்களான ஜஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, கருணாகரன், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள் என பலரும் 'இந்தி தெரியாது போடா, I am a தமிழ் பேசும் Indian' போன்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்களை அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இத்தகைய புகைப்படங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் ட்விட்டரில் டிரெண்டானது. தேசிய ஊடகங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்தன.
இந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் இதனை வாங்க இளைஞர்கள் பலரும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், இந்தி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்கள் உற்பத்திக்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதாக திருப்பூர் பனியன் கம்பெனி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். திமுக எம்பி கனிமொழி இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய வடிவத்தை அளித்ததைத் கொண்டு உற்பத்தி செய்ததாகவும், ஆனால் அவை இந்த அளவிற்கு ட்ரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.