தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல் போகும் வெள்ளைத்தங்கம்..ஜவுளித்தொழிலை ஆக்கிரமிக்கும் பாலியஸ்டர்..ஜவுளித்தொழிலை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன? - முடங்கும் ஜவுளித்தொழிலுக்கு

TN Govt Cotton Procurement Corporation: தமிழ்நாடு அரசு பருத்தி கொள்முதல் கழகம் அமைத்து அரசே விலை நிர்ணயித்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே பருத்தி விவசாயம், ஜவுளித்தொழில் இரண்டுமே பாதுகாக்கப்படும் என கொங்கு மண்டல விவசாயிகளும், ஜவுளி உற்பத்தியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Farmers Request to Make a TN Govt Cotton Procurement Corporation
பருத்தி உற்பத்தி மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசு பருத்தி கொள்முதல் கழகம் அமைக்கக் கோரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 7:13 AM IST

Updated : Dec 21, 2023, 7:24 AM IST

பருத்தி உற்பத்தி மற்றும் ஜவுளித்தொழிலை மீட்டெடுக்க அரசே கொள்முதல் கழகம் அமைக்கக் கோரிக்கை

திருப்பூர்: பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகள் போதுமான விலை கிடைப்பதில்லை என உற்பத்தியை கைவிட்டு செல்லும் நிலையில், இன்னொருபுறம் பஞ்சு-நூல் விலை நிலையில்லாமல் உயருவதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பலரும் பாலியஸ்டர் துணி உற்பத்திக்கு மாறி வருகிறார்கள். இதனைத் தடுக்க, தமிழ்நாடு அரசு பருத்தி கொள்முதல் கழகம் அமைத்து விலை நிர்ணயம் செய்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே பருத்தி விவசாயம், ஜவுளித்தொழில் இரண்டுமே பாதுகாக்கப்படும் என விவசாயிகளும், ஜவுளி உற்பத்தியாளர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்று பாரதியின் காலத்திலிருந்தே விவசாயத்துக்கு அடுத்து நிலையூன்றியத் தொழில் என்றால் அது நெசவுத்தொழிலே. பருத்தியின் வரலாறு பாரதியின் வரிகளுக்கு முன்னரே பிறப்பு கண்டுள்ளது. கி.மு. 2500 ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தி செய்ததற்கான குறிப்பை 'இந்திய பருத்தி ஆடைகள், கிரேக்க கம்பளியை விட சிறந்தது' என்று பதிவு செய்துள்ளார் சமகாலத்து கிரேக்க வரலாற்றாளரும், வரலாற்றின் தந்தையுமான எரோடோட்டசு.

கிரேக்க மொழி குறிப்புகளைத் தவிர்த்து, கி.மு.1500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த வேதங்களில் ஒன்றான 'ரிக்' வேதத்திலும் நம் நாட்டு பருத்தியின் பயன்பாடும், நெசவுத்தொழில் பற்றிய குறிப்புகள் உள்ளன. இப்படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, நமது முன்னோர்கள் ஆடைகள் தயாரிப்பான நெசவுத்தொழிலில் ஈடுபட பருத்தியை விளைவித்து பயன்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

தொன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்த இந்த தொழில் தற்போது, கண்ணுக்கெட்டியவரை காணாமல் போயுள்ளது. சமீபகாலமாக பருத்தி பஞ்சுகள் காணாமல் போய், ஆடைகள் பாலியஸ்டர் மயமாக மாறிவருகிறது. இதனால் பருத்தி விவசாயிகளும், ஜவுளி உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் இருக்கும் சாதகமான காலநிலை, மண்வளம் பருத்தி உற்பத்தி அதிகரிக்க செய்து இருந்தது. இதனால் அம்மாவட்டங்களில் நெசவு, பின்னலாடைத் தொழில்களும் வளர்ந்தன. 'தமிழ்நாட்டின் மான்செஸ்டர்' ஆக வளம்வரும் கோவையில் நூல் மில்களும், திருப்பூரில் பின்னலாடைகளும், ஈரோடு மற்றும் கரூரில் ஜவுளித்தொழில் என தமிழ்நாட்டின் மேற்கு மண்டலங்கள் ஜவுளிமயமாகிய நிலையில், பொருளாதரத்திலும் வேலைவாய்ப்பிலும் மாநிலத்தின் முதுகெழும்பாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது, இந்த நிலையுடன் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலங்கள் நீடிக்கின்றதா..? என்றால், இல்லை என்பதே அப்பகுதி விவசாயிகளின் வாக்காக மாறியுள்ளது. தொழில்மயமாதலாலும், விவசாயத்தில் நிறைந்த பிரச்னைகளாலும் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பருத்தி உற்பத்தியானது 10-ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகளும், தொழில் முனைவோர்களும்.

"பருத்தி பஞ்சில் இருந்து தயாராகும் நூலின் விலை என்பது ஒரு கிலோ 200-க்கும் அதிகமாகவே இன்றுவரை உள்ளது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பலரும் பாலியஸ்டர் துணிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், 'வெள்ளைத்தங்கம்' என அழைக்கப்படும் பருத்தி பஞ்சிலிருந்து கிடைக்கும் நூலின் விலை அதிகமாக இருந்தாலும், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறியே..

ஒரு கிலோ பஞ்சு ரூ.50 முதல் ரூ.70-க்குத்தான் விற்கப்படுகிறது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, இடைத்தரகர்கள் தலையீடு, பெருமுதலாளிகளின் பதுக்கல் ஆகிய காரணங்களால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால், பருத்தி உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது" என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த விவசாயி, மணி.

பருத்தி தொழிலை மீட்க வழியே இல்லையா? என்றால், "இல்லை பருத்தி தொழிலில் உற்பத்திக்கான உதவிகளை அரசு செய்வதாலும், பருத்தியை அரசே கொள்முதல் செய்து விலை நிர்ணயித்து விற்பனை செய்தால் மீண்டும் பருத்திப் பஞ்சு உற்பத்தியில் விவசாயிகள் இறங்க வாய்ப்பிருக்கிறது" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் பருத்தி விவசாயம் நடக்கிறது. ஆனாலும், நமது மாநிலத்திலே உற்பத்தியாகக் கூடிய ஜவுளித் துணிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி பஞ்சு கிடைப்பதில்லை. குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையுள்ளது. பருத்திப் பஞ்சு உற்பத்தியில் நாட்டின் மொத்த உற்பத்தியே 330 லட்சம் பேல் என்கின்ற போது, தமிழ்நாட்டில் மட்டும் பருத்தி பஞ்சுக்கான தேவை 115 லட்சம் பேல்களாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் உற்பத்தி என்பது வெறும் 6 லட்சம் பேல்கள் என்ற அளவில்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து 7.99 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஜவுளி ஏற்றுமதி செய்து நாட்டில் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும், பருத்தி பஞ்சின் விலை கட்டுக்கடங்காமல் இருப்பதால் இந்த தொழில் பெரும் திணறலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால், குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பாலியஸ்டர் துணிகள் நேரடியாக ஜவுளித் தொழிலை ஆக்கிரமித்து வருகிறது. இப்போதைய ஜவுளி உற்பத்தியில் விலை குறைவாக கிடைக்கும் என்ற ஒரே காரணத்தால் சுமார் 40 சதவீத அளவுக்கான பல்வேறு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாலியஸ்டர் ஆடைகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பதுக்கலும் இடைத்தரகர்களின் தலையீடும்; அரசே கொள்முதல் விலை நிர்ணயம் செய்க:இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரான முத்துரத்தினம் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "பருத்திப் பஞ்சினை பதுக்கல் செய்து விற்பனை செய்வது, இடைத்தரகர்கள் தலையீடு போன்றவற்றால் தான் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான பஞ்சு உரிய விலைக்கு கிடைப்பதில்லை. அதனால், ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

நூல் விலையேற்றம், ஜவுளித்தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தியாளர்கள் பலரும் பாலியஸ்டர் ஆடைகளை உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அரசு சார்பில் தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் கழகம் அமைத்து அரசே விலை நிர்ணயம் செய்து தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்.

ஒரு காலத்தில் பருத்திப் பஞ்சு உற்பத்தியின் ‘ஹப்’(hub) ஆக இருந்த தமிழ்நாட்டின் மேற்கு மண்டலங்கள் இன்றைக்கு பருத்தி விளைச்சலே இல்லாத அளவுக்கு சென்றுவிட்டன. இங்கு விளையக்கூடிய நீண்ட இழைகள் கொண்ட கருங்கண்ணி, கம்போடியா ரக பருத்திகளுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசும், விலையும் கிடைத்தது. இதனால்தான், அரசே காட்டன் மார்க்கெட் அமைத்து பருத்தி விற்பனை உச்சம் தொட்டது.

பருத்தியின் அரண்மனையாக இருந்த கொங்கு மண்டலத்திலிருந்து பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட பருத்தி இன்று ஏனோ? 'நகரமயமாக்கல்' சூழல் போன்ற வாழ்வியல் காரணங்களால் பருத்தி உற்பத்தியே இல்லாத அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த வரலாறு ஆய்வாளர் சிவதாசன். "இந்த நிலையை மீட்டெடுக்க விவசாயிகளுக்கான கடன்கள், பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் ஆகியவற்றை மாநில அரசு முன்னெடுத்தால் கொங்கு மாவட்டங்களில் பருத்தி விளைச்சல் மீண்டும் உச்சம் தொடும் என்பதில் சந்தேகமே இல்லை" என்கிறார், சிவதாசன்.

நாட்டிலேயே அதிக அளவு ஜவுளியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் தமிழ்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், உரிய விலையில் பஞ்சு கிடைக்காமல் திணறுகின்றனர். அதேநேரம், விவசாயிகளும் விலை கிடைக்காமல் இருக்கின்றனர். தமிழ்நாடு அரசு பருத்தி கொள்முதல் கழகம் அமைத்து விலை நிர்ணயம் செய்து தந்தால் பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

பருத்தி பஞ்சை வைத்து ஜவுளி உற்பத்தி செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள் என்பது மட்டுமே கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையும் கனவுமாக இருந்து வருகிறது. ஆகவே, இதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க:தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது!

Last Updated : Dec 21, 2023, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details