திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் அடுத்த வே.வடமலைபாளையம் கிராமத்தில், ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதிகளில் மழை நீரை சேகரிக்க முடியாததால், விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதி இல்லை. எனவே இப்பகுதி மக்கள் அனைவரும் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட அரசாணை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டதால் அதற்கான பணிகள் நேற்று (ஜூலை 25) தொடங்கப்பட்டது.