தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.
தொழிலாளர்களின் சொந்த ஊரின் மாநில அரசு அனுமதியளித்த பின்னர், சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவரை அவர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு சிலர் தாங்களாகவே வாகனம் ஏற்பாடு செய்து கொண்டு செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாஸ் வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி, கடந்த இரண்டு நாட்களாக சில இடங்களில் போராட்டம் நடத்தினர். அவர்களையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையம் பகுதியில் உள்ள அகில் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பனியன் கம்பெனி விடுதியில், 600க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.