திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை ஆறு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த க்ளீனர் உயிரிழந்துள்ள நிலையில், ஓட்டுநர் தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். நிகழ்விடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “விபத்து குறித்து கேரள அரசிடம் தெரிவித்துள்ளோம். கேரள அரசு, மீட்புக் குழுவினரை இங்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளது. அவர்கள் வந்த பின், உயிரிழந்தவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. தப்பியோடிய ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்” என்றார்.