இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் 55 சதவிகிதம் பின்னலாடைகளை, திருப்பூரில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மூலமாக ஆண்டுக்கு 27,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி இந்திய நாட்டுக்கு கிடைக்கிறது. இவ்வாறு தொழில்துறையில் முக்கிய பங்களிப்பை அளித்துவரும் திருப்பூரில் தொழிலாளர் பிரச்னை மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, மருத்துவமனை என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொழிலாளர்களின் வருகை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் பெற்ற நிறுவனங்கள் கூட தற்போது அந்த ஆர்டர்களை முடித்து தருவதற்கு தொழிலாளர்கள் இன்றி தவித்து வருகின்றன.
மும்மரமாக நடைபெறும் பின்னலாடை தொழில் இதன் காரணமாக ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டியிட்டு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க முன்வந்துள்ளன. மேலும் தொழிலாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ஒவ்வொரு நிறுவனமும் தற்போது போட்டியிட்டு சலுகைகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
அதன்படி ஆண்டு முழுவதும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் அளிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்புகளை சில நிறுவனங்கள் முன்வைத்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று தாய்லாந்து பாங்காக் என வெளிநாட்டு சுற்றுலா அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின் 10 மணிக்கு மேலாக பணிக்கு வரக்கூடிய பெண்களுக்கு சிறப்புச் சலுகை என பணிக்கு ஆட்களை இழுக்கக் கூடிய சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. இதன் மூலம் திருப்பூரில் ஆட்கள் பற்றாக்குறையானது எந்த அளவிற்கு உள்ளது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
தொழிலாளர் செல்வராஜ் பேட்டி