குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல கதையுள்ள திரைப்படங்களை மக்கள் வரவேற்கின்றனர் திருப்பூர்:நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் புதுமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் உருவான பார்க்கிங் திரைப்படம் (Parking Movie) கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி, இரண்டாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையடுத்து ஹரிஷ் கல்யாண் மற்றும் இயக்குநர் ராம் உள்ளிட்ட படக் குழுவினர், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேரடியாகச் சென்று படம் குறித்த கருத்தை ரசிகர்களிடம் கேட்டறிந்தும், ரசிகர்களுடன் இணைந்து பார்க்கிங் திரைப்படத்தைப் பார்த்தும் வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (டிச.09) திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் ‘பார்க்கிங்’ பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் இணைந்து பார்த்து படம் பார்த்து மகிழ்ந்தனர். பின்னர், படம் குறித்த கருத்துக்களை நேரடியாக ரசிகர்களிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது, ” பார்க்கிங் திரைப்படம் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படத்தை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவந்த நிலையிலும், புதுமுக இயக்குநர், புதுமுக நடிகர்கள் இடம்பெற்ற குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல கதையுள்ள திரைப்படங்களை மக்கள் வரவேற்கின்றனர். இந்த ஆண்டில் வெளியான படங்களில் பார்க்கிங் திரைப்படம் மிகச் சிறந்த படத்தின் பட்டியலில் இடம்பெறும் என விமர்சனங்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறேன். இதேபோல் பலரும் முன்வந்து உதவ வேண்டும்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்கூட்டியே எதையும் கணிக்க முடியாதது” என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “இந்த படம் ரசிகர்களோடு எவ்வாறு இணைக்க முடியும் என உருவாக்கப்பட்டதோ அதுபோல அமைந்திருக்கிறது. ரசிகர்களின் அத்தனை வரவேற்புக்கும், ஊடகத்துறையினரின் ஒத்துழைப்புக்கும் நன்றி” என கூறினார்.
இதையும் படிங்க:10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்றாங்க… வருத்தப்பட்ட நயன்தாரா!