தீபாவளிக்கு தயார் செய்யப்பட்ட 8 கோடி டி ஷர்ட்டுகள் தேக்கம் திருப்பூர்:திருப்பூர் மாநகரில் தயாராகும் ஆடைகள் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டம், மாநிலத்தை தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக, திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களில், ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி அளவில் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
காதர்பேட்டை பகுதியில் ஆடைகள் மொத்த விற்பனை செய்யக்கூடிய கடைகளின் மூலமாக, உள்நாட்டு உற்பத்திக்கான பின்னலாடைகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக இங்குள்ள 2 ஆயிரம் கடைகளில், ஒவ்வொரு கடைகளிலும் 5 ஆயிரத்திற்கும் குறையாத, மொத்தமாக 10 கோடி டி ஷர்ட்டுகள், குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பின்னலாடைகள் தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, வெளிமாநில வியாபாரிகள் காதர்பேட்டைக்கு வருகை புரிந்து பின்னலாடைகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இதனால், மொத்த விற்பனையானது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி நெருங்கிய நிலையிலும், வெளிமாநில வியாபாரிகள் உட்பட உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வருகை புரியவில்லை. தீபாவளி பண்டிகை முடிந்து இரண்டாம் கட்ட விற்பனையும் நடக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு உள்நாட்டு வியாபாரத்திற்காக உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த டி ஷர்ட், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், வழக்கத்திற்கு மாறாக 80 சதவீதம் தேக்கமடைந்துள்ளதாக காதர்பேட்டை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காதர்பேட்டை செகண்ட்ஸ் பனியன் உரிமையாளர் சங்கத் தலைவர் குமார் கூறுகையில், “இந்த வருட தீபாவளிக்கு, எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரிகளின் வருகை இல்லை. இதனால், மொத்த விற்பனைக்காக, உற்பத்தி செய்த துணிகளில் 80 சதவீதம் தேக்கமடைந்தன. 20 சதவீத துணிகள் மட்டும் விற்பனையாகியுள்ளன. விலை உயர்வின் காரணமாக காட்டன் துணிகள் அதிகளவில் விற்பனையாவதில்லை. இப்பகுதியில், பின்னலாடை வர்த்தகம் தேக்கமடைந்துள்ளதால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் நேரடியாக ஆடைகள் உற்பத்தி செய்து விற்கப்படுவதால் நமது விற்பனை குறைந்துள்ளது” என்று கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பின்னலாடைகள் உற்பத்தி செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில், வெளிமாநில வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வாடிகையாளர்களின் வருகை குறைவின் காரணமாக 8 கோடிக்கும் மேலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில், இவற்றை விற்று முதலீட்டை பெறுவதற்குள் இந்த ஆண்டின் பாதி நாட்கள் கழிந்து விடும் என்று காதர்பேட்டை வர்த்தகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம்.. ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம் அறிவிப்பு!