கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீட்டில் முடங்கிருக்கும் மக்களின் தேவைக்காக கடந்த மாதம் தமிழ்நாடு அரசு ரேசன் அட்டைக்கு ரூ 1000, அரிசி, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கியது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு, அரசின் நிவாரண பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியை சேர்ந்த பெண்கள், சமூக வலைத்தளமான டிக்டாக்கில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சில பொதுமக்கள் தங்களுக்கு கிடைத்த நிவாரண பொருள்களை கிராமத்து பெண்களுக்கு கொடுத்து தற்காலிமாக உதவினர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், "கடந்த சில நாள்களாக அத்தியாவசிய தேவையான காய்கறி, எண்ணெய், பால் இல்லாமல் தவித்து வருகிறோம். மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 இஸ்லாமிய குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தாராபுரம் வருவாய்த்துறை மூலம் ஒதுக்குப்புற கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை" என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கண்காணிக்கும் ட்ரோன் - ஓட்டம் பிடிக்கும் இளைஞர்கள்!