அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்’ 17 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூர்: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக திருப்பூரில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 17வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சரத்குமார் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியில் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்’ 17 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் பேசியதாவது, "2026 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாகவும், அதற்கான பணிகளை நிர்வாகிகள் மேற்கொண்டு, சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தற்போது, சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அந்த சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. கருத்து சுதந்திரம் என்பது பொதுவானது. மாநில அமைச்சர் பேசிய பேச்சுக்கு வட மாநில சாமியார் தெரிவித்த வன்முறை கருத்திற்கு அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அவர் கைது செய்யப்பட வேண்டும். வட மாநிலங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் செல்லும்போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். என்று கூறினார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 1971 ஆம் ஆண்டு வரவேற்றவர் அப்போதைய தமிழக முதல்வரான மு.கருணாநிதி. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தவிர்த்து, அனைவரையும் கலந்து ஆலோசித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார், "சமத்துவ மக்கள் கட்சி 16 ஆண்டுகள் நிறைவு பெற்று 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய நிலையில், இன்னும் தனித்துப் போட்டியிடாமல் தங்கள் பலத்தை எப்படி சோதிப்பது என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ன மாதிரியான சீர்திருத்தங்களை கொண்டு வரப்போகும் என தெரியாத நிலையில், பண அரசியல் பலமாக இருக்கும் போது இயக்கத்தின் சகோதரர்களால் அதனை எதிர்கொள்ள முடியாது எனவும் அதனால் தான் தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி இருப்பதாகவும், 2026 ஆண்டு தேர்தலை இலக்காக கொண்டு பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, உலக அளவில் இந்தியா என்ற பெயர் ஆழ்மனதில் பதிவான நிலையில் அதனை மாற்றுவது தேவையற்றது. மேலும், நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நடிகர் சங்க நிர்வாகத்தில் தலையிடுவதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. ஆனால் தற்போது நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கட்டிடம் வளர்ந்து வர வேண்டும்" என்றும் கூறினார்.
இதையும் படிங்க:Immanuel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!