திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏராளமான சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்குத் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புது மார்க்கெட் வீதி, காமாட்சி அம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் பல்வேறு கடைகளை வைத்துள்ளனர். இதில் ராஜஸ்தானை சேர்ந்த அனுமத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களான குக்கர், மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.சனிக்கிழமை(ஜூலை 29) இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்க 7 பேர் வந்துள்ளனர். திடீரென அந்த கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அனுமத் சிங்கை மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளனர்.
அப்போது அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.தொடர்ந்து அவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் கடையில் வைத்திருந்த ரூ.16 லட்சம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அனுமத் சிங் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.