திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதைச் சேர்ந்த பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் சசிகுமார் (24) என்பவரும் காதலித்து வந்தனர்.
நேற்றிரவு (ஜுன்.12) தனது காதலியை அவரது வீட்டின் அருகே உள்ள மைதானத்திற்கு வரவழைத்த சசிகுமார், நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது சசிகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, காதலியின் கழுத்தில் இரண்டு இடங்களில் வெட்டினார். வலியைத் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட, அங்கேயே விட்டுவிட்டு சசிகுமார் தப்பியோடினார்.
ரத்தத்துடன் தனது வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், தனது பெற்றோரை எழுப்பியுள்ளார். மகளை ரத்தத்துடன் பார்த்த பெற்றோர் உடனே அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.