நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 2 டன் எடை கொண்ட பாய்லர் வெடிப்பு - போலீசார் தீவிர விசாரணை! திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 2 டன் எடை கொண்ட பாய்லர் வெடித்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பறந்து சென்று விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள சின்ன குரும்பத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தன்னுடைய 4 ஏக்கர் விவசாய நிலத்தில் மஞ்சம் புல் விவசாயம் செய்து அவற்றிலிருந்து மூலிகை எண்ணெய் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவருடைய நிலத்தில் சுமார் இரண்டு டன் எடையுள்ள பாய்லர் அமைத்து அதன் மூலமாக மூலிகை எண்ணெய் தயார் செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று(செப்.12) அவருடைய விவசாய நிலத்தில் உள்ள பாய்லரில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாய்லரில் வெப்பம் அதிகமாகியதால் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு டன் எடைகொண்ட பாய்லர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், பாய்லர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பறந்து விவசாய நிலத்தில் விழுந்ததில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியாவில் 10-ல் 6 பெண்களுக்கு இரத்தசோகை.. ஆய்வு முடிவு கூறும் அதிர்ச்சி தகவல்!
இச்சம்பவத்தில், பாய்லரில் பொருத்தப்பட்டிருந்த மீட்டர் மற்றும் இரும்பு துண்டுகள் வெடித்து சிதறி அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் சுமார் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் எடுக்கும் பணியில் 4 பேர் ஈடுபட்டிருந்த நிலையில், பாய்லர் அருகில் பணியில் ஈடுபட்டிருந்த முனிசாமி என்பவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று பலியாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, அங்கு இருந்தவர்கள் உடனடியாக முனிசாமியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அமெரிக்காவின் விவசாய பொருட்களுக்கு வரியை குறைத்த இந்தியா! என்ன காரணம்?