திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் 1-ஆவது தார்வழி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் இவர் அதே பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதாகக் கூறி, ஜெயகுமார் மற்றும் அவரது மைத்துனர் வெங்கடேசன் ஆகியோர் ஒன்றாக கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இரவு வனவிலங்குகளை விரட்ட நிலத்திற்குச் சென்று உள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த விவசாய நிலத்தில், வனவிலங்குகளை வேட்டையாட அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜெயகுமார் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர் வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், அவர்களது உறவினர்கள் அவர்களைப் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மலை அடிவார பகுதியில் உள்ள நிலத்திற்குச் சென்று பார்த்த போது இருவரும் வனவிலங்குகளை வேட்டையாடப் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.