ஏலகிரி மலையினை மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையைச் சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்தித் தர வேண்டும் என ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஏலகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ”ஏலகிரி மலை பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. மேலும் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் படகு இல்லம், நடைபாதை அமைத்துத் தர வேண்டும் எனவும், நிலாவூர் பகுதியில் போட் ஹவுஸ் மற்றும் பூங்கா அமைத்து தர வேண்டும் எனவும், 100 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைத்துத் தர வேண்டும் என எம்எல்ஏ தேவராஜ் கேட்டுக் கொண்டதன் பேரில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க:‘மகளிர் உரிமை தொகையை ஸ்டாலின் தான் தருகிறார் என சொல்லுங்கள்’ - பணியாளர்களுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுரை!
மேலும் திமுக ஆட்சி வந்த பிறகு மூன்று மாதம் தூங்காமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைத்ததின் காரணமாக கரோனா ஒழிந்ததாக கூறினார். மேலும் ஏலகிரி மலையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 9 லட்சத்து 50,000 சுற்றுலா பயணிகள் வந்து சென்றதாகவும், மேலும் 2023ஆம் ஆண்டில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்து 75 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றதாகவும் கூறினார்.
இதன் அடிப்படையில் ஏலகிரி மலையினை மேம்படுத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். பள்ளகன்னியூர் பகுதியில் ஆய்வு செய்த போது வார்டு உறுப்பினர் தனம்மாள் தன் வார்டுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லை என்றார். அப்போது அமைச்சர் ராமச்சந்திரன் எல்லா பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் அனைத்து வசதிகளையும் மாவட்ட ஆட்சியர் மூலம் செய்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க:காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு