தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியும் நிறைந்த சாலை: மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் திருப்பத்தூர்வாசிகள்! - tiruppattur district news

திருப்பத்தூர் நோக்கி வரும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது, வாணியம்பாடி சாலையில் இருக்கும் குழிகள். பகலில்கூட பரவாயில்லை, இரவில் வழிநெடுக பள்ளங்களிருந்தால் அந்தப் பயணம் எப்படியிருக்கும்? இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கத் தொடங்கின. இதற்காக கோரிக்கை மனுக்கள் கொடுத்து சலித்த திருப்பத்தூர்வாசிகள், தற்போது வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல மீம் வழியாக தங்கள் ஊரின் கள நிலவரத்தை வைரலாக்கி வருகின்றனர்.

thirupathur_road_damage
thirupathur_road_damage

By

Published : Dec 8, 2020, 6:15 PM IST

Updated : Dec 11, 2020, 7:03 PM IST

திருப்பத்தூர்:இன்றைய தலைமுறையினரின் எளிமையான மொழி, ’மீம்’. பக்கம்பக்கமாகக் கட்டுரைகள் எழுதும் பிரச்னைகளைக் கூட இரண்டே வரிகளில் மீமாக பதிவிட்டு கடந்துவிடுவர். இது பிரச்னைகளை நீர்த்துப்போகச் செய்யும் என விமர்சனங்கள் இருந்தாலும்கூட, வெகுஜன மக்களின் ஏகோபித்த வரவேற்பும் இதற்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

கோரிக்கை மனுக்கள் கொடுத்து சலித்த திருப்பத்தூர்வாசிகள், தற்போது வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல மீம் வழியாக தங்கள் ஊரின் கள நிலவரத்தை வைரலாக்கி வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித சிரமும் இல்லாமல் பயணித்தவர்களை வாணியம்பாடிக்குள் நுழையும்போது முகம் சுழிக்க வைக்கிறது, அடுத்தடுத்த சாலைப் பள்ளங்கள். சீரமைக்கப்படாத இந்தச் சாலைகளை விரைந்து சரி செய்ய விடுக்கும் எச்சரிக்கை மணி போல தற்போது இந்த மீம்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


திருப்பத்தூர் டூ வாணியம்பாடி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக உருவானது. புதிய மாவட்டம் பிரிக்கப்பட்ட ஓராண்டில், இங்குள்ள பெரும்பாலான பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்தினர் விரைவாகக் களைந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றனர்.

குண்டும் குழியும் நிறைந்த சாலை: மீம்ஸ்களால் வறுத்தெடுக்கும் திருப்பத்தூர்வாசிகள்!

இன்னமும் மாவட்டத்தின் முக்கிய சாலையாக உள்ள வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை மட்டும் அதில் விதிவிலக்காக உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வரும் வாகன ஓட்டிகள் வாணியம்பாடி வரையுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வாகனத்தைச் செலுத்திவிட்டு, வாணியம்பாடி அருகே வரும்போது ஆமை போல வாகனம் ஓட்டும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.


அடுத்தடுத்து உள்ள பள்ளங்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. பகலில்கூட பரவாயில்லை, இரவில் வழிநெடுக பள்ளங்களிருந்தால் அந்தப் பயணம் எப்படியிருக்கும்? அடிக்கடி விபத்துகள் நடக்கத் தொடங்கின.

திருப்பத்தூர் செல்லும் 22 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை ஒரு வழி சாலையாக இருப்பதால் விரைவில் சாலைகள் சேதமடைந்துவிடுகின்றன. அவசரமாக மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸுகள்கூட இப்பகுதியில் அடிக்கடி பிரேக் அடித்து நிதானமாகவேச் செல்கின்றன. ஒவ்வொரு குழிக்குள்ளும் வாகனத்தை ஏற்றி இறக்கி சாகசம் போல வாகனத்தைச் செலுத்த வேண்டிய சூழல் உள்ளூர்வாசிகளுக்கு உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளதால், அதை மீம் வழியாக நெட்டிசன்கள் கேலியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் இந்த மீம்கள் ஒருபுறம்நகைச்சுவையைப் பறைசாற்றினாலும், மறுபுறம் மக்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நம் கண் முன் நிறுத்துகிறது.


இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலை 'தேசிய நெடுஞ்சாலை துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு சாலை அமைக்க விடப்பட்ட டெண்டர் ரத்தானது. சமீபத்தில் சாலை சீரமைப்புக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிவடைந்த சில நாள்களிலேயே சாலை அமைக்கும் பணி தொடங்கும் என பதிலளித்தனர்.


சாலைப் பயணங்கள் இலக்கை விரைவாக அடைய உதவும். திருப்பத்தூர் பகுதியிலோ பழுதான சாலைகளால் இலக்கிற்கு முன்னதாகவே விபத்துகள் நேர்கின்றன. இது போன்ற இன்னல்களைக் குறைக்க மாவட்ட நிர்வாகம், இனியாவது துரிதமாக செயல்பட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Last Updated : Dec 11, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details