திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலு - சாவித்திரி தம்பதியினருக்கு 14, 8 மற்றும் 6 என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் பாலு மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் தங்களது மூன்று பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட நேரத்திலும், பாலு மற்றும் சாவித்திரி ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தாய், தந்தை இருவரும் மது போதைக்கு அடிமையாகி உள்ளதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், அவர்களுடைய உறவினர்களிடமும் விசாரணை நடத்தியதில் இருவரும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பிள்ளைகளுக்கு சரியான உணவு வழங்குவதில்லை, பிள்ளைகளுக்கான அன்றாட தேவைகளை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், உடனடியாக முதல் பெண் குழந்தையை மீட்டு திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் தங்கும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக தன்னுடைய வாகனத்திலேயே அழைத்துச் சென்று தங்கி பயில்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.