திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 1903ஆம் ஆண்டு ஏற்பட்ட பாலாறு பெருவெள்ளத்தில், உயிரிழந்த 200க்கும் மேற்பட்டவர்களின் 120வது நினைவு நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவுத் தூணிற்கு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பாலாறு உள்ளது. 1903ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல ஏரிகள் உடைந்து, பாலாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவில், திடீர் என்று ஏற்பட்ட வெள்ளத்தினால், வாணியம்பாடியில் பாலாற்றின் அருகே இருந்த பல வீடுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பாலாற்று வெள்ளத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வாணியம்பாடி சந்தைப் பகுதியில், நகராட்சி சார்பில் 5 அடி உயரத்திற்கு நினைவுத் தூண் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி பாலாற்றை காக்க நினைக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், பாலாறு நினைவுத் தூணிற்கு மாலை அணிவித்து, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.