திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலத்தை கடந்து தற்போது மழை வெள்ளம் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் தற்போது மாராப்பட்டு பாலத்தை கடந்து செல்கிறது. அப்போது, அந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து பாலாற்றில் வெள்ளம் செல்கிறது, இதன் காரணமாக பாலாற்று தண்ணீர் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
திருப்பத்தூரில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் விவசாயிகள் வேதனை
திருப்பத்தூர்: பாலாற்று தண்ணீர் துர்நாற்றத்துடன் பாலத்தை கடந்துச் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால் தோல் கழிவுநீர் ஏதேனும் கலந்துவிடப்பட்டிருக்கிறதா என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், அலுவலர்கள் தண்ணீரை சோதனை செய்ய எடுத்துச் சென்றனர்.
மேலும் பல ஆண்டுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பாய்வதால் தங்களுடைய விவசாயம் செழிக்கும் என எண்ணிய விவசாயிகள், மழை வெள்ளத்தில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து விடப்பட்டிருந்தால் தங்களுடைய விவசாயம் பாதிக்கப்படும் எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.