திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை பகுதியில் ஆம்பூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மெகருன் நிஷா, வாணியம்பாடி வேட்பாளர் தேவேந்திரன் ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்த வேனில் நின்றபடி நேற்று (மார்ச் 11) பொதுமக்களிடையே வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சீமான், 'மனிதர்களாகிய நாம் தாகம் ஏற்பட்டால் தண்ணீரை கடையில் வாங்கிக் குடிக்கிறோம். காக்கை, குருவிகள், ஆடுமாடுகள், விலங்குகள், பறவைகள் எப்படி குடிக்கும். இயற்கை வளங்களை சுரண்டி மற்ற உயிரினங்களுக்கு நாம் கேடு விளைவித்துக் கொண்டு இருக்கிறோம். இயற்கை அனைவருக்கும் பொதுவானது, அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
பசி, பஞ்சம், அடக்குமுறை, ஒடுக்குமுறை ,கொலை கொள்ளையற்ற, ஊழலற்ற, ஆட்சியை உருவாக்க நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் பரம்பரை பரம்பரையாக அரசியல் செய்த தலைவரின் வாரிசு இல்லை. ஏழை எளிய குடும்பத்தில் பிறந்து மக்களின் பிரச்சினைகளை அறிந்து மக்களில் ஒருவனாக நின்று கொண்டு இருப்பவர்கள்.
கருணாநிதி கட்சி, ஆட்சி, கொடி, சின்னம் என அனைத்தையும் முக ஸ்டாலின் கையில் கொடுத்துவிட்டு சென்றார். கருணாநிதியின் மகன் என்பதை தவிர்த்து ஸ்டாலினுக்கு வேறு என்ன தகுதி உள்ளது. ஒரே மேடையில் இந்தப்பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின், அந்தப்பக்கம் ஐயா எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடுவில் நான் என விவாதிக்க தயாரா?.