திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்துகொண்டு பேசினார். மேலும் மாநில பொறுப்பாளர்கள் வெங்கடேசன், காத்தியாயினி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான நிர்வாகிகளுடன் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி: பின்னர், மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நெடுஞ்சாலை மற்றும் சாலைகள் குறித்து ஆய்வு செய்தேன். பிறகு கட்சியினரையும் சந்தித்தேன். தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தோம். பெரும்பாலான சாலைப் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மேலும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை நிதி மூலம் பணிகள் நடந்து வருகிறது.
பசுமை விமான நிலையம்:சென்னை விமான நிலைய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் விமானம் இயக்கி சோதனை செய்யப்படும். மேலும், பசுமை விமான நிலையமும் அமைக்க உள்ளோம். தமிழ்நாட்டு அரசுதான், இதற்கான இடத்தினை அறிவிக்க வேண்டும். இரண்டு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. எந்த இடம் என்பதை தமிழ்நாடு அரசுதான் அறிவிக்க வேண்டும்.
சாலைகளை பாதுகாக்கவே சுங்கச்சாவடிகள்: சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், 1952ஆம் ஆண்டு முதல் உள்ளது நாங்கள் புதிய சுங்கச்சாவடிகளை தொடங்கவில்லை. சாலைகளை சீரமைக்கவும் பாதுக்காகவுமே சுங்கசாவடிகள் உள்ளது. சாலைகளின் நடுவில் உள்ள சுங்கச்சாவடிகள் இரண்டு ஆண்டுகளில் அகற்றப்பட்டு, அனைத்து ஜிபிஎஸ் வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டு டிஜிட்டல் மூலம் தானியங்கி கட்டணம் கிலோமீட்டருக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படும்.