சென்னை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைப்பதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் ஒன்றியம் கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில், பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.10) திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் K.N.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன் ஆகியோர் பங்கேற்று, உறுப்பினர்களின் படிவங்களை ஆய்வு மேற்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2015ல் நூறாண்டுக் கால வரலாறு காணாத மழை பெய்தது. சென்னை மக்கள் பல துன்பத்தைச் சந்தித்தார்கள். ஆனால், தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த போதிலும், வடிகால் அமைக்கப்பட்டு, ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதாகக் கூறி, எந்த பாதிப்பும் ஏற்படாது எனப் பொதுமக்களை ஏமாற்றியுள்ளது இந்த திமுக அரசு.
இதன் விளைவாகச் சென்னை முழுவதும் மிகப்பெரிய வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த வெள்ளத்தால் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். 2015ல் ஏற்பட்ட பாதிப்பிற்குப் புரட்சித்தலைவி அம்மா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். ஆனால் இன்று பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த போதிலும், அரசு வெறும் 6 ஆயிரம் மட்டுமே நிதி உதவி வணங்குகிறது.
இது சோளப்பொரியை கொடுத்து மக்களை சாப்பிடுங்கள் என்று சொல்வதைப் போல ஸ்டாலின் செய்துள்ளார். இது தவறான செயல். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது போல, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்காமல் தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ள சேதங்களை வெளி உலகத்திற்கு மறைக்கக் காட்டும் அக்கறை மற்றும் வேகத்தை, சென்னை மக்களைக் காப்பாற்றுவதில் காண்பிக்க வேண்டும். இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி நடத்தி விட்டு, இப்பொழுதும் முந்தைய அரசைக் குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை.
4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் பணத்தை திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் வருந்தி வருகிறார்கள். விரைவில் இதற்கு ஸ்டாலின் அரசு பதில் சொல்ல வேண்டும். கமல்ஹாசன் 2015ல் வெள்ளம் வந்த பொழுது தமிழக அரசின் நடவடிக்கையைக் குறை கூறினார். ஆனால் இன்று இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் அனைவரும் ஒன்றாக நின்று செயல்பட வேண்டும் என்று கூறுவது கமல்ஹாசனின் சந்தர்ப்பவாத அரசியலை எடுத்துக்காட்டுகிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மழையில் சென்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் தொப்பி மற்றும் ரெயின் கோட் வாங்கி கொடுத்தார். தற்போது வரை அது வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய நடிகர்கள் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என்று சம்பளம் வாங்குகிறார்கள். அதில் ஒரு பங்கை மக்களுக்குச் செலவு செய்தாலே மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெறலாம்.
தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. எனவே ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்” எனக் கூறினார். இதைத்தொடர்ந்து மாற்றுக் கட்சியிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வரவேற்பு அளித்தார்.
மேலும், கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்த முதியவர்களுக்கும் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தார். இந்த நிகழ்வில் மத்திய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் வேர்க்குமாரி சாமிநாதன், மத்திய செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:"சென்னை மக்களுக்கு எந்த உதவியும் வழங்கத் தயாராக உள்ளார் பிரதமர்" - மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி