நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் உள்பட 141 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து விசிக தொண்டர்கள் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருப்பத்தூர்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், கடந்த டிச.13-ம் தேதி, நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்.பிக்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர். மக்களவை உறுப்பினர்கள், இருவரையும் பிடித்து, அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ணப் புகைகளை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்களவையில் மறுஅறிவிப்பு வரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, டிச.15-ம் தேதி அவை கூடியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக மக்களவையைச் சேர்ந்த 95 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 46 எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பத்தூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாசம் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்தும், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் விரைவு ரயில் மறிக்க முயன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பின் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இதுவரை 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் சிறுதானிய உணவு திருவிழா கோலாகலம்.. 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் செய்து அசத்தல்..