திருப்பத்தூர்: வாணியம்பாடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் நேற்று (டிச.31ல்) மதியம் அவரது வீட்டிற்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் வேலை நிமித்தமாக வெளியே செல்வதற்காக வந்த பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாதன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு முன் நிற்கும் மஞ்சுநாதனின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, மஞ்சுநாதன் அப்பகுதி நகரக் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து, சிசிடிவி பதிவான காட்சிகளைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விரைவில் வாகனத் திருடிய நபரைக் கைது செய்து வாகனத்தை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய காவல் துறை இன்று (ஜன.1) ஆலங்காயம் கூட்டுச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை காவல் துறை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினர் கார்த்திக்கை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் நியூ டவுன் நாடார் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பதும், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காவல்துறை கார்த்திக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கார்த்திக்கிடம் இருந்து விலை உயர்ந்த 3 இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்